வெள்ளம், நிவாரணம், கல்வி, உத்தியோகம், குடும்பம் என சற்றே பிசியாக இருந்துவிட்டேன். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்னமும் மழை விடாப்பிடியாக பெய்து கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கில் மக்கள் உறையுள், சொத்து, உறவு என அனைத்தையும் இழந்து நிவாரண மையங்கலினுள் உள்வாங்கபட்டுள்ளார்கள். எங்கு பார்த்தாலும் மரண ஓலம் போன்றது போலவே சத்தம். எத்தனையோ வருடங்கள் சேமித்த சொத்துக்கள் கண் முன்னே வெள்ளம் அழிப்பதை பார்த்துகொண்டு இருக்க யாரால் தான் முடியும்.
எமது அலுவலகம், மற்றும் நண்பர்கள் வட்டாரத்தினர் ஒன்று சேர்ந்து எம்மாளியன்ற உதவிகளை, குறிப்பாக குழந்தைகள், தாய்மார்களை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை நகரிலுள்ள கிண்ணியா எனும் பிரதேசத்திலுள்ள மக்களிடம் கொண்டு சேர்த்தோம். அங்கு போன பின்பு தான் எமக்கு அது உண்மையாகவே உறைத்தது. நாம் கொண்டு சேர்த்த பொருட்கள் ஒரு சிறு கூட்டத்தாருக்கே போதுமாக இருந்தது. மக்களோ சாரை சாரையாக, கூட்டம் கூட்டமாக பெருகி இருந்தார்கள். எம்மை போன்ற பலர் தலைநகரிலிருந்தும் இலங்கையின் பிற மாவட்டங்களிலிருந்தும் நிவாரண உதவிகளோடு வந்திருந்தார்கள்.
குறிப்பாக அவற்றை பங்கீடு செய்வதில்தான் அப்பப்பா எத்தனையோ சிக்கல்கள். இது ஒரு அவசரகால நிவாரணத்தில் சகஜம்தான், என்றாலும் சரியாக தேவைப்படும் மக்களுக்கு போய் சேருமா என்பது ஐயமே. உடல் வலிமை, பலம் உள்ளவர்கள் மாத்திரமே முன் வந்து அடித்து பிடித்து பொருட்களை வாங்கி செல்வதை பார்க்க கூடியதாக இருந்தது. மனத்தை அது ரணமாக்கியது. அரசாங்க நிவாரணத்தையும் சிறிதளவில் பார்க்க கூடியதாக இருந்தது. ஆனாலும் இன்னமும் நிறைய அளவில் அது தேவையானதாக இருக்கிறது.
இன்று உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கிறாகள் என்று கூறுவதற்கு எனக்கு விருப்பமாக இருந்தாலும், உண்மை அதுவில்லையே. எத்தனையோ பேர்கள் தமது சொந்தங்களை, சொத்துக்களை இழந்து பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். இன்று பொங்கல் தினமா என்பதை கூட கற்பனை செய்து பார்க்க முடியாதவர்கள் பலர் உண்டு. எப்படி எப்படியெல்லாம் குழந்தைகள், குடும்பத்தினரோடு கொண்டாட வேண்டும் என நினைத்திருந்தவர்கள் பலருக்கு அப்பாக்கியம் இந்த ஆண்டு கிடைக்கவில்லை. கிட்டவில்லை.
பிரிஸ்பேன் வெள்ளம் |