பிரித்தானிய சர்வதேச தொலைக்காட்சியான Channel 4 நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட “இலங்கை – கொலைக்களம்” காணொளிக்கு பல்வேறு தரப்பட்ட சார்பு மற்றும் மாற்று கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பொதுவாக வெளிநாடுகளில் வாழும் மக்கள் சார்பான கருத்துளையும், இலங்கையில் உள்ள பெரும்பாலானோர், அதிகமான தமிழ் பேசும் மக்களை தவிர்த்து மாற்று கருத்துக்களை கொண்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.
|
Channel 4 footage |
இந்த காணொளியின் நம்பகத்தன்மை (authenticity) பற்றிய விவாதங்கள் தற்போது சற்று உச்ச நிலையை அடைந்துள்ளன என கூறலாம்.
|
Mr Basil Rajapakse |
இதுபற்றி இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் திரு பசில் ராஜபக்சே அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது,
“Once again some pro-LTTE elements have used the Channel 4 news agency after giving money to them (Channel 4) in order to tarnish the image of both the Sri Lankan government as well as the Army” என கூறினார்.
அதாவது, தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களால் பணம் கொடுக்கப்பட்டே இந்த காணொளி தயாரிக்கப்பட்டதாகவும் இது இலங்கையின் கௌரவத்தை சர்வதேச ரீதியில் பாதிப்படைய செய்வதற்காகவே தயாரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
|
Dr Dayan Jayathilake |
மேலும் பிரான்சுக்கான இலங்கை தூதுவர் டாக்டர் தயான் ஜயதிலக இது பற்றி ரேடியோ பிரான்சுக்கு விவரம் அளிக்கும்போது, இதுவகையான போர்க்குற்றம் மற்றும் பொதுமக்கள் படுகொலைகளை, பாரிய அழிவுகளை தரும் ஆயுதங்கள் ஈராக்கிளுள்ளதாக கூறப்பட்டதற்கு ஒப்பானது அதாவது நம்பமுடியாத்தன்மை வாய்ந்தது என கருத்துரைத்தார்.
|
Mr Siri Hewawitharana |
இக்காணொளி பற்றி அவுஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற கேபிள் மற்றும் தொலைத்தொடர்பு இலத்திரனியல் வித்தகர் திரு சிறி ஹெவவிதாறன (இலங்கை அரசாங்கத்தின் சார்பில் காணொளியை ஆராயும் தொழிநுட்ப வித்தகர்) கூறுகையில், “இக்காணொளி முற்றிலும் போலியானது. இது தயாரிக்கபட்டதன் நோக்கமே வேறு, தற்போது செயலிழந்து, மதிப்பிழந்து இருக்கும் Channel 4 தொலைக்காட்சியின் மதிப்பை கூட்டி காட்டுவதற்காகவே இது தயாரிக்கபட்டிருக்கிறது. இங்கிலாந்தில் Channel 4 தொலைக்காட்சியை குப்பைகளின் அரசன் (King of trash) என்றே அழைப்பது வழக்கம்” என சுட்டிக்காட்டினார். மேலும் அவர் கூறுகையில், “ஒரு சாதாரண அனுபவமற்ற காணொளி எடிட்டிங் செய்யக்கூடியவருக்கே காட்சிகளின் ஒழுங்கமைப்பில் உள்ள குறைபாடுகளையும் மற்றும் காட்சிகளுக்கு இடையிலான ஒளிமாறுபாட்டையும் கண்டுகொள்ளமுடியும்.” எனவும் “இந்த காணொளியில் திகதி மாறாட்டம் இருப்பதை அமெரிக்க வித்தகர்களே ஒத்துக்கொண்டார்கள்.” எனவும் அவரது வாதங்களை முன்வைத்தார்.
இன்று இலங்கையில் வெளியாகிய “The Sunday Observer” இல் அதன் ஆசிரியர் கருத்து தெரிவிக்கையில், இது முற்றிலுமாக அடிப்படையற்ற காணொளி, இதன் மூலம் இலங்கையில் தற்போது சமூகங்களிடையே உருவாகியுள்ள இன நல்லிணக்கம் பாதிப்படைய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இலங்கை இராணுவம் தமது உயிரையும் துச்சமாக மதித்து அந்நேரத்தில் சுமார் ஆறு லட்சம் மக்களை வடக்கு கிழக்கிலிருந்து புலிகளின் கோரப்பிடியிலிருந்து காப்பற்றியதையும் அவரது ஆசிரியர் தலையங்கத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த காணொளியை காண்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து Channel 4 தொலைக்காட்சி பற்றி அறிந்து தீர்மானங்களிற்கு வருமாறும் கூறப்பட்டிருக்கிறது.
இலங்கையின் பழம்பெரும் போட்டோ படப்பிடிப்பாளரும், செய்தியாளருமான திரு சுசந்த பெர்னாண்டோ இதுபற்றி அவரது கட்டுரையில் கூறுகையில், இப்போது சந்தையில் மிக சிறந்த நுன்னியமான வீடியோ எடிட்டிங் வசதிகள் கொண்ட சாப்ட்வேர்கள் உள்ளதாகவும், இது போன்ற ஒன்றை தயாரிப்பது ஒன்றும் அப்படி பெரிய வேலை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட கானொளிகள் பார்ப்பவர்கள் மத்தியில் கூடுதலாக மனதை கவரும் எனவும் அதற்கு சான்றாக இங்கிலாந்தின் வார்விக் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் டாக்டர் கிம்பெர்லி வேட் என்பவர் செய்த ஆய்வினையும் முன்வைத்தார்.
இதேவேளை இலங்கை இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் மெதவேல குறிப்பிடுகையில், இக்காணொளி பற்றிய உண்மைத்தன்மையை அறிவதற்காக இராணுவமும் தமது விற்பன்னர்கள் அடங்கிய குழாமுடன் ஆலோசனை செய்வதாக குறிப்பிட்டார். இதற்காக பெருமளவில் விமான படையினரின் ஆளற்ற விமானம் மூலமாக படம் பிடிக்கப்பட்ட ஆகாய போட்டோக்களை பயன்படுத்த போவதாகவும் தெரிவித்தார்.
இன்று “The Sunday Leader” பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் கட்டுரையாளர் திருமதி திசராணி குணசேகர அவர்கள் கொஞ்சம் நடுநிலைமையாக அலசியிருப்பதை இங்கு குறிப்பிடலாம். Channel 4 தொலைக்காட்சி நான்கு தொழிநுட்ப விற்பன்னர்களை வைத்து இக்காணொளி உண்மையென வாதிடுவதையும் இலங்கை அரசோ ஒரே ஒரு தொழிநுட்ப விற்பன்னரை வைத்துக்கொண்டே இதனை சாதிப்பதாகவும் அவர் மேலும் எழுதியுள்ளார்.
இந்த காணொளி உண்மையானதா அல்லது மற்றவர்கள் கூறுவதை போன்று போலியாக தயாரிக்கப்பட்டதா என்ற உண்மை நிலை கிடைக்க பெறும் வரை இந்நிலை தொடரும் எனவும் கூறமுடியும். எது எப்படியாயினும் எமது தலைக்குள் தற்போது ஓடிக்கொண்டிருப்பது இதன் உண்மை நிலை தான் என்ன? யார் இதனை உண்மை என்றோ இல்லை போலியானது என்றோ தீர்மானமாக கூறப்போகிறார்கள்? இந்த கேள்விக்கு விடை உண்மையில்தான் கிடைக்குமா?
இம்ரான் சாஹிர்
News Source:
1. The Sunday Observer
2. The Sunday Leader
3. The Nation
4. The Sunday Times
5. Other critical reading from other websites